சினைப்பசு கன்று ஈனும் போது கால்நடை வளர்ப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்

சினைப்பசுவை எப்பொழுது கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்?

சினைக் காலம் (சுமார் 280நாட்கள்) முடிந்த பிறகே பசு கன்று ஈன்ற வேண்டும் அப்பொழுது தான் கன்று முழு வளர்ச்சி அடைந்திருக்கும். பசு தானாகவே கன்று ஈன்ற வேண்டும். சில சமயங்களில் பசுவால் கன்று ஈன்ற முடியாத சுழ்நிலை உருவாகி விடுகிறது. அந்த சமயங்களில் அனுபவம் இல்லாதவரிடம் மருத்துவம் செய்தால் அவரின் தவறான அணுகுமுறை வைத்தியத்தால் கன்றின் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் மருத்துவமனைக்கு இது போல் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சினைப்பசுக்கள் அழைத்து வரப்படுகின்றன. இந்நிலையில் அந்தப் பசுவையும் கன்றையும் காப்பாற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தவறான சிகிச்சையால் பல சமயங்களில் கன்று இறந்து விடுகிறது. சினைப்பசுவின் கற்பப்பையும் சேதமடைந்துவிடுகிறது. இதனால் பசு பலவீனமாகி சோர்ந்து விடுகிறது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வது கடினம். அதனால் சினைப் பசுவை காலத்தோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் கன்றையும் பசுவையும் காப்பாற்ற வாய்ப்புகள் அதிகம். கால்நடை மருத்துவமனையில் நவீன சாதனங்கள் மற்றும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் சிறந்த மருத்துவ உதவியை அளிக்க முடியும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். சினைப் பசுவை எப்பொழுது மருத்துவரிடம் அழைத்து வரவேண்டும் என்பதை கால்நடை வளர்ப்போர் அறிந்திருக்க வேண்டும்.

சினைப்பசுவை/ எருமையை எப்படி கவனிக்க வேண்டும்?

சினைப்பசு/ எருமைக்கு ஏழாவது மதம் முதல் கூடுதலாக அடர்தீவனம் மற்றும் தாது உப்பு கலவையை தந்தால் தான் கன்று நல்ல வளர்ச்சியடையும். கன்று ஈன்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே சினைப்பசுவின் கறவையை நிறுத்தினால் தான் அடுத்த கறவைக்கு மடியின் வளர்ச்சியும் பால் உற்பத்தியும் சிறந்ததாக அமையும். சினைப்பசுவை கன்று ஈன சில நாட்கள் இருக்கும்பொழுதே மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே தனித்து வைத்து தீவனம் அளிக்கவேண்டும்.

கன்று ஈன்றுவதற்கு முன் உள்ள அறிகுறிகள் என்ன?

சினை ஊசி போட்ட தேதியை குறித்து வைத்தால் தான் கன்று ஈன்னும் தேதியை தோராயமாக கணக்கிட முடியும். சினைக்காலம் பசுவிற்கு 282 நாட்களும் எருமைக்கு 310 நாட்களுமாகும். கன்று ஈன்றுவதற்கான அறிகுறிகள், கன்று ஈனும் 24 மணி நேரத்திற்கு முன்பே பால் மாடி சுரந்து காணப்படும், பசுவின் அறை தடித்து தளர்ந்து காணப்படும். அதிலிருந்து கண்ணாடி போன்ற கோழை (வலும்பு) வடியும் இடுப்பெலும்பு கன்று ஈன்றுவதற்காக விரிவதால் இருபுறமும் உள்வாங்கி இருக்கும். கன்று ஈன்ற போகும் பசு மற்ற பசுக்களை விட்டு தனியாக இருக்கும். அமைதியற்று இருக்கும், காலால் உதைக்கும், வாலை சுழற்றும், கன்று ஈன்றுவதற்கு சிறிது நேரம் இருக்கும் தருவாயில் தான் வால் பகுதியை உயர்த்தி வைத்துக்கொள்ளும்.

கன்று ஈன்றுவதற்கான அறிகுறிகள் என்ன?

பனிக்குடம் உடைந்து முதலில் வெளியே வரும். இதனால் பசுவின் பின்பகுதி ஈரமாக இருக்கும். கன்றின் முன்னங்கால்கள் தான் முதலில் வரும். ஒரு கால் மட்டும் வந்தாலோ, அல்லது மூக்கு மட்டும் வந்தாலோ, வால் பகுதி தெரிந்தாலோ, உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

கன்று ஈனுவதில் சிக்கல் வருவதற்கான காரணங்கள்?

  • ஊட்டச்சத்து பற்றாக்குறை
  • கன்று குறுக்கில் விழுந்து வெளிவராமல் இருத்தல்.
  • ஒழுங்கற்று பூதாகரமாக வளர்ந்த கன்று.
  • குறுகிய இடுப்பு எலும்பு இடைவெளி உள்ள தலையீத்து பசு.
  • முந்தைய சினைக்காலத்தில் செய்த முறையற்ற சிகிச்சை.

எப்பொழுது சினைப்பசுக்களை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும்?

  • பனிக்குடம் உடைந்து 4 மணி நேரம் கழித்தும் பசு கன்று ஈனாமல் இருந்தால்.
  • பசு அமைதியின்றி காலால் உதைத்துக் கொண்டிருந்தால்.
  • பசு கன்று ஈன்று 8- 12 மணி நேரம் கழித்தும் உறுப்பு போடாமல் இருத்தல்.

சினைப்பசுவை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக எப்படி அழைத்து வர வேண்டும்?

  • பசுவை ஏற்றும் வாகனத்தில் வைக்கோல் கொண்டு மெத்தை போல் அமைக்க வேண்டும்.
  • வாகனத்தில் மெதுவாக ஏற்ற வேண்டும்.
  • சினைப்பசு அதிராத வண்ணம் மெதுவாக வாகனத்தை ஓட்ட வேண்டும்

தமிழாக்கம்
டாக்டர் .மு. ராஜலட்சுமி